உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வெங்கடேசப் பெருமாளுக்க்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு முன்னாள் உறுப்பினர், ஆர்.குமரகுரு அவருடைய மகன் கே.நமச்சிவாயம் ஆகியோர் உளுந்தூர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் 3.97 ஏக்கர் அளித்துள்ள இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்பட உள்ளது.
உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுவதற்கு குமரகுரு நிலம் அளித்ததோடு, ரூ.10 கோடி நன்கொடை அளிக்கவும் முன்வந்தார். கோயில் கட்டுவதற்கு ரூ.3.54 கோடி நன்கொடையை திரட்டி அளித்த குமரகுரு மீதமுள்ள ரூ.6 கோடியை நன்கொடை வசூலித்து அளிப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உறுதியளித்தார். இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுவதற்கு கையப்படுத்தும் பணியில் இறங்கியது.
அதன்படி, கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலை – 45-ஐ ஒட்டியுள்ள இடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அந்த இடம் கோயில் கட்டுவதற்கு ஏற்ற இடம் என்று சான்றளித்ததையடுத்து அந்த இடத்தை கையகப்படுத்தியது.
உளுந்தூர்பேட்டையில் கோயில் கட்டும் விவகாரத்தை ஆய்வு செய்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், முதற்கட்டமாக, ரூ.4 கோடி மதிப்பீட்டில், கர்ப்பாலயம், கற்களால் ஆன அர்த்தமண்டபம், முகப்பு மண்டபம், ராஜ கோபுரம் மற்றும் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு பிரகாரச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
இதனால், தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டும் பணியை தொடங்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”