Thirunelveli: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன் மொழி ஊராட்சியில் ஆயன்குளம் கிராம் உள்ளது. இங்குள்ள "அதிசய கிணறு" சில ஆண்டுகளுக்கு முன்பு தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தது. மழை வெள்ளத்தின் போதும் பல ஆயிரம் கன அடி உபரி நீர் இந்த கிணற்றுக்குள் திருப்பிவிடப்படுவது உண்டு. அப்படி பயந்து ஓடும் நீரால் இந்த கிணறு நிரம்பி வழிந்ததே இல்லையாம். அதனால் தான் மக்கள் இதனை அதிசய கிணறு என்று அழைக்கிறார்களாம்.
இந்த அதிசய கிணறு குறித்து ஐ.ஐ.டி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆய்வும் நடத்தினர். அப்போது இந்த கிணறின் தன்மை, கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வுகள் நடந்தன. கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்பு நீர்வழிப்பதை இருப்பதாகவும், அதனால் கிணறு தண்ணிரை உள்வாங்குகிறது, அதன்மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவித்தனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் நிலையில், நெல்லை தாமிரபரணியில் 1 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, வெள்ளநீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. காற்றாற்று வெள்ளத்தால் அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெள்ளநீர் திசையன்விளை அருகே ஆயன்குளம் அதிசய கிணறுக்கு செல்கிறது.
கடந்த ஆண்டுகளில் 2 ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கிய இந்த அதிசய கிணறு தற்போது பல மடங்கு தண்ணீரை உள்வாங்கி வருகிறது. இத்தனை ஆயிரம் கன அடி நீரையும் கொஞ்சமும் சளைக்காமல் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உள்வாங்கிக் கொண்டே இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“