திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர், தனிப்பிரிவு காவலர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் அதன் உப நதிகளில் எப்போதும் மணல் கொள்ளை அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. மணல் கொள்ளைக்கு எதிராக யார் களம் இறங்கினாலும் அவர்களை தீர்த்துக் கட்டவும் சமூக விரோதிகள் தயங்குவதில்லை. நீதிமன்றம் தலையிட்டு மணல் அள்ள தடை விதித்தும், கொள்ளையர்கள் அடங்கவில்லை.
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மணல் கொள்ளையை எதிர்த்த ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மணல் கொள்ளையர்களின் கோர ரத்த பசிக்கு போலீஸ்காரர் ஒருவரே பலியான கொடூரம் நடந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி போலீஸ் நிலையம் அருகே விஜயநாராயணம் என்ற ஊர் இருக்கிறது. ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைத் தளம் இந்த ஊரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணி செய்தவர், ஜெகதீஷ். காக்கிச் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து தகவல்களை சேகரித்து காவல் துறைக்கு அளிப்பதுதான் இவரது வேலை!
தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ், அந்தப் பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று (மே 6) இரவு அவர் நாங்குனேரி அருகே பரப்பாடியில் இரவு ரோந்து சென்றபோது மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இரும்புக் கம்பியால் அவரை தாக்கி கொலை செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
மணல் கொள்ளையை தடுக்க ஜெகதீஷ் முயற்சிகள் மேற்கொண்டு வந்ததே இந்தக் கொலைக்கான காரணம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் அப்பகுதியில் நம்பியாற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்த டிராக்டரை ஜெகதீஷ் வழிமறித்தார் என்றும், அதைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஏட்டு ஜெகதீஷை வெட்டினர் என்றும் தெரிய வந்திருக்கிறது. டிராக்டரை போலீஸார் கைப்பற்றினர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.