Advertisment

சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் தலைவர்: மரணத்திற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம்

கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருக்கு (எஸ்.பி) மரணம் வாக்குமூலம் என தலைப்பிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tirunelveli East district congress leader KPK Jeyakumar Dhanasingh hand written letter before death Tamil News

ஏரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கே.பி.கே ஜெயக்குமார் தனசிங்... மரணத்திற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

KPK Jeyakumar Dhanasingh | Thirunelveli | Congress: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவரை நேற்று முன்தினம் புதன்கிழமை (02.05.2024) முதல் காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Advertisment

அந்தப் புகாரில், தனது தந்தை கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும், காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் உவரி  போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காணவில்லை தேடப்பட்டுவந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஜெயக்குமார் கைப்பட எழுதிய கடிதம் 

இதற்கிடையில், கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருக்கு (எஸ்.பி) மரணம் வாக்குமூலம் என தலைப்பிட்டு கே.பி.கே ஜெயக்குமார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பது பின்வருமாறு:- 

"நான் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் சுயநினைவோடு தங்கள் சமூகத்திற்கு தெரியப்படுத்தும் விபரங்கள் கீழ்கண்டவாறு, எனக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. நான் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கண்டு கொள்ளவில்லை. 3 தடவை எனது வீட்டு வளாகத்தில் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. நான் இரவு நேரில் சென்று சத்தமிட்டால் ஓடி சென்றது நடந்த்துள்ளது. திருடுவதற்காக வந்த நபர்களாக இருக்கும் என்று நான் பெரிதுபடுத்தவில்லை. 

ஆனால், எனக்கு எதாவது நேர்ந்தால் கீழ்கண்டவர்களின் சதியாக இருக்கும் என சந்தேகிக்கப்படுவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்களை பட்டியல் இடுகிறேன். 

1. ஆனந்த ராஜா, கள்ளி குளம் முன்னாள் கோயில் தர்ம கர்த்தா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் - விபரம்:-

சுமார் 18 ஆண்டுகளுக்கு என்னிடம் பெற்ற சுமார் 46.00 லட்சம் ரூபாய்க்கு, வள்ளியூர் ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில் 7.80 ஏக்கர் நிலத்தை எனது பெயருக்கு எழுதிக் கொடுத்தார். தற்போது நில பாதிப்பு உயர்ந்த காரணத்தால், ஏதேதோ காரணங்கள் சொல்லி, அதை அரை விலைக்கு தர சொல்லி துன்புறுத்தினார், மிரட்டினார், 'நான் பாம்பே ரவுடிகளை ஏவி கொலை செய்துவிடுவேன். உனது மகன் பெயருக்கு மாற்றி எழுதி உள்ளாய் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. என்னால் உனது குடும்பத்திற்கே ஆபத்து வருப்போகிறது' என நேரில் மிரட்டி வந்தார். தற்போது வேண்டுமென்றே சில நபர்களை தூண்டி விட்டு மேற்படி சொத்தின் மீது வாதிடவதை தொடர்கிறார். எனவே, மேற்படி ஆனந்த ராஜா-வால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

2. குத்தாலியகம் 

சுமார் 14 வருடத்திற்கு முன்பு பணம் நான் வட்டியோடு செலுத்தி விட்ட எனக்கு, முன் கொடுத்த காசோலையை பயன்படுத்தி, வழக்கு தொடர்வேன், கொலை செய்வேன் என பலமுறை மிரட்டி உள்ளார். அவராலும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

3. ஜெய்கர் இடையங்குடி 

இடையங்குடி சி.சி.எம் பள்ளியில் கட்டிடம் கட்டின பாக்கி தொகை சுமார் 30 லட்சம் ரூபாயை தராமல், தரவிடாமல் தடுத்து வருகிறார். நாங்குநேரியில் கேட்டதற்கு, அது அப்பாவு எம்.எல்.ஏ தான் முடிவு செய்ய வேண்டும், அவரிடம் பேசுங்கள், மீறி செயல்பட்டால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். தபால் அனுமதி பணம் கேட்டு கோரிக்கை வைத்தேன். உனது நடவடிக்கை கொலையில் தான் முடியும் என்று மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. ரூபி மனோகர் நாங்குநேரி எம்.எல்.ஏ    

3 வருடங்களாக என்னிடம் நிறைய காரியம் செய்து தருகிறேன் என்று ரூ. 70 லட்சங்களுக்கு மேல் பணம் வாங்கி இருக்கிறார். எந்த காரியமும் செய்து தராமல், அவர் சொன்னபடி எந்த காண்ட்ராக்ட் வேலையும் வாங்கித் தரவில்லை. தற்போது எம்.பி தேர்தல் வேளையில் என்னை செலவு செய்ய சொன்னார். சுமார் 8 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டார். பணத்தை திருப்பி கேட்டதற்கு, என்னை கொலை செய்வேன் என்று செல்லப்பாண்டியன் மறுகால் குறிச்சி என்பவர் மூலமாகவ கொலை மிரட்டல் விடுத்தார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

மேலும், கே.வி தங்கபாலு என்பவர் தேர்தல் வேலைக்கு என்னிடம் பணம் பெற்றார். செலவு செய்ய வைத்தார். சுமார் 11 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் வாங்கிக் கொள் என்று சொல்லி முடித்து விட்டார். ஆனால், எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். கமலா போன்ற பெண் மூலம் அவரது செய்தி வெளியிடுகிறார். கமலா ஏற்கனவே கணவனை கொன்றவர் என்பது அனைவருக்கும் அறிந்த உண்மை. 

5. ஜேசு ராஜா புதியம் புத்தூர், இம்மானுவேல் கிரவுர் 

காலம் சென்ற இவரது தந்தையிடம் 30 வருடம் ஒப்பந்தம் போட்டு தார் பிளான்ட் மாட்டி செயல்படுத்தி வந்தேன். கடந்த 4 வருடங்களாக வேலை இல்லை. எனக்கு தெரியாமல் மேற்படி சுமார் 24 லட்சம் மதிப்புள்ள தார் பிளான்ட்டை இரவோடு இரவாக வேறு நபருக்கு கழற்றி விற்று விட்டார். நான் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அது என் இடத்தில் இருந்தது, எனக்கு தான் சொந்தம் அப்படி தான் செய்வேன் முடிந்ததை செய்துகொள் என்று விட்டார். விற்பனை செய்த பணத்தையாவது கொடுத்து விடு தம்பி என்று பலமுறை கேட்டேன். இறுதியாக, என்னிடம் உள்ள ஆட்கள் உன்னை செய்து விடுவார்கள் என்று மிரட்டினார். எனது அன்னான் வி.பி துரை இருக்கிறார். எல்லாம் பார்த்துக்கொள்வார். எல்லாம் பார்த்துக் கொள்வார் என்றார். 

மேலும், இந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் (சுமார் 40 நாட்களாக) பல்வேறு அன்லாக் நம்பர்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளது. எனக்கு எதாவது ஆபத்து நேரிட்டால் மேற்படி நபர்கள் தான் அதற்கு பொறுப்பு. மேற்படி நபர்கள் தான் காரணம் என உறுதிப்படக் கூறுகிறேன். மேற்படி நபர்கள் என்னை வஞ்சித்து ஏமாற்றி எடுத்துக்கொண்டவற்றை எனது குடும்பத்திற்கு பெற்றுத் தந்திட வழிவகை செய்யும்படியும், மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Congress Thirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment