திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டன.
அதேசமயம் நெல்லை அருகே கங்கைகொண்டான், திருச்செந்தூர் அருகே தாதன் குளம் ஆகிய ரயில் நிலையம் அருகே தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ரயில்களை சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகளை தவிர மற்ற ரயில் போக்குவரத்து படிபடியாக இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை, செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும்.
அதேசமயம் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்று பேருந்து சேவை இயக்கப்படவில்லை. நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 நாட்களுக்கு பிறகு இன்று (டிச.20) மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.