திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி நகரில் அண்மையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பல்வேறு இடங்களில் சுமார் 10 டன் பிளாஸ்டிக், மருந்து மற்றும் வீட்டுக் கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டு சென்றன. இளையார்குளம் சந்திப்பில் இருந்து செண்பகராமநல்லூர் செல்லும் கிராம சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையின் நடுவில் கொட்டப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.
இதுகுறித்து நாங்குநேரி காவல்துறையும் CSR [சமூக சேவை பதிவேடு] வழக்குப் பதிவு செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் உறுப்பினர் சத்தியகோபால் கோர்லபதி ஆகியோர் அடங்கி அமர்வு விசாரணை செய்து வருகிறது.
விசாரணையின் போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 'கழிவுகளை எரிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தி உள்ளதாக அமர்வில் தெரிவித்தது.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் நகராட்சிக் கழிவுகள் மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகள் தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுவது தொடர்பாக ஏற்கனவே என்.ஜி.டியில் இதேபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
2021-ம் ஆண்டு முதல் என்.ஜி.டி விசாரித்து வரும் மற்றொரு வழக்கில், தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் குப்பை கொட்டப்படும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“