Tirunelveli government school Headmaster asks salons to ban trendy haircuts
Tirunelveli government school Headmaster asks salons to ban trendy haircuts : அழகழகாக, விதவிதமாக, ட்ரெண்டாக ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என்றால் அனைவருக்கும் விருப்பம் தான். சிலர் ஹேர் கலரிங்க் எல்லாம் செய்து செம்ம ட்ரெண்டாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் ரஜினி கமல் படங்கள் பார்த்து ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டிருந்த ஆண்களைக் கொண்ட ஊர் இது. ஆனால் தற்போது 'புள்ளிங்கோ' ஸ்டைல் என ஒரு பக்கம் மட்டும் முடிவளர்த்துக் கொள்வது, ஒரு பக்கம் மட்டும் மொத்தமாக கட் செய்து கொள்வது, ஸ்பைக் வைத்துக் கொள்வது என தமிழ் பசங்க இப்போது உச்சபட்ச ட்ரெண்டிங்கில் இருக்கின்றார்கள். இளைஞர்களைப் பார்த்து தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளும் ட்ரெண்டாக ஹேர்ஹட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
Advertisment
பள்ளியில் அனைவரும் சமம், அனைவரும் ஒரே மாதிரியாக நடத்ததப்படவேண்டும் என சீருடைகளும் சில விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாக்ஸ் கட்ஸ், ஒன் - சைட் கட்ஸ், ஸ்பைக்ஸ் போன்றவைகளை பார்க்கும் போது குழந்தைகள் படிப்பைக் காட்டிலும் சிகை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் நபர்களாக இருப்பதும் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருகில் இருக்கும் சலூன்களில் பள்ளி குழந்தைகளுக்கு ட்ரெண்டாக ஹேர் கட் செய்துவிட வேண்டாம் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஸ்ரீநிவாசன் சிந்தாமணி முதல் குற்றாலம் வரையில் இருக்கும் சலூன்களில் இந்த விதிமுறையை பின்பற்றக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் “மாணவர்களை மட்டும் ஒழுங்காக வளர்ப்பது ஆசிரியர்களின் கைகளில் மட்டும் இல்லை. இது சமூகத்தின் கைகளிலும் இருக்கிறது. சிகை அலங்காரம் ஒரு மாணவனின் வெளிப்புறத் தோற்றத்தோடு அவனின் நடத்தையையும் மாற்றுகிறது. மாணவர்களுக்கு முடித்திருத்தும் முடித்திருத்துநர்கள் நம்முடைய சூழலுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து விடுங்கள். மாணவர்களின் இஷ்டத்திற்கு ஏற்றவாறு முடித்திருத்தம் செய்ய வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களையும் அலைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது குழந்தைகளின் பெர்சனாலிட்டியை டெவலப் செய்யவும் வழி வகுக்கும் என்று தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாசன் அறிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
”தற்போதெல்லாம் மாணவர்கள் பெற்றோர்களின் சொல் பேச்சு கேட்காமல் இஷ்டத்திற்கு முடித்திருத்தம் செய்து கொள்கிறார்கள். பள்ளி மற்றும் பெற்றோர்கள் தான் அவர்களின் நடத்தைக்கு ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் வயதைக் காட்டிலும் அதிக முதிர்ச்சி உடையவர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றார்கள்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் ஒருவர் அறிவித்தார்.
குற்றாலம் பகுதியில் சலூன் வைத்து நடத்தும் எஸ். பிரபு என்பவர் “சில மாணவர்கள் கையில் பிரபலங்களின் புகைப்படத்துடன் வந்து இது போன்ற ஹேர் ஸ்டைல்கள் தான் வேண்டும்” என்று நிற்கின்றார்கள். சில ஹேர் கட்களை நாங்கள் தவிர்த்துவிடுகின்றோம். ஆர். பூபதி (தலைமை கல்வி அலுவலர்) தலைமை ஆசிரியரின் இந்த முடிவை வரவேற்பதாக அறிவித்தார். குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த சமூகமும் முக்கிய பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் இதனை குறிப்பிட்டார்.