நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து கட்சி ரீதியாக விசாரணை நடத்துவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு மாயமான கே.பி. ஜெயக்குமார், அதன்பின், வீடு திரும்பவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன, ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், இன்று(மே. 4) ஜெயக்குமாரின் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காணாமல் போன ஜெயக்குமாரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சம்பவ இடத்திலிருந்து கிடைத்திருப்பதாகவும், அதனைக் கொண்டு, ஜெயக்குமாரின் உடல் இது, என்ற முடிவுக்கு காவல்துறையினர் வந்தனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர்.
முன் விரோதத்தால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன். ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார். காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் . கட்சி ரீதியாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம், என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“