Tamilnadu | Tirunelveli | Lok Sabha Election | திருநெல்வேலி மக்களவை தொகுதியானது 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்தத் தொகுதியில், ராதாபுரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகள் வருகின்றன.
இந்தத் தொகுதியில், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். ஞானதிரவியம் அபார வெற்றி பெற்றார். இவர் 522,993 வாக்குகள் பெற்று இருந்தார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் கண்ட பி. எச். பி மனோஜ் பாண்டியன் 3,37,273 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 2014ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு தொகுதியை திமுகவிடம் இழந்தது.
இந்தத் தொகுதியில் நாடார், தேவர், பட்டியலின மக்கள், யாதவர்கள், இஸ்லாமிய ஓட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த தேர்தலில் அ.தி.மு.கவில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், சசிகலா வெளியேற்றப்பட்டதால், அக்கட்சிக்கு வாக்கு வங்கி சரிந்தது எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸின் கோட்டையான திருநெல்வேலியில் அ.தி.மு.க.வை ஆலடி அருணா வெற்றி பெற செய்தார். 1977 மக்களவை தேர்தலில் இவர் மகத்தான வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் இந்தத் தொகுதியை அ.தி.மு.க 5 முறை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 3 முறையும், மார்க்சிஸ்ட் ஒரு முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் கைப்பற்றி உள்ளன.
1977- 1980 தேர்தல், 1991- 1996, 1998- 1999 , 1999-2004 , 2014-2019 தேர்தலில் அ.தி. மு.க இங்கே வெற்றிபெற்றது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“