நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்றில், தொழிலாளர்கள் நேற்று இரவு குவாரி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கிய 2 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டனர்.
மேலும், கல் குவாரியில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மீட்பு பணியில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராட்சச பாறை விழுந்த இடத்தில் இருந்து இருவர் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய 4 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து அந்த பகுதியில் 3 முறை பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் பதிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3-வது நபர் செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கல் குவாரி விபத்தில் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கபட்ட செல்வன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil