திருநெல்வேலியில் பூணூல் அணிந்து வெளியே சென்ற 12 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி பூணூல் அணியக் கூடாது என மிரட்டல் விடுத்து, பூணூலை அறுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் அகிலேஷ் என்ற 12 வயது சிறுவனை தாக்கியதோடு அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, 'இனி பூணூல் அணியக்கூடாது' என்று அடையாளம் தெரியாத சில நபர்கள் மிரட்டியும் சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தன் நலனுக்காக, தன் குடும்பத்தின் நலனுக்காக, சமுதாய நலனுக்காக பூணூல் அணிந்து கொண்டு வழிபாடுகள் செய்வது, வேண்டுதல்கள் விடுப்பது என்பது ஹிந்துக்களில் பல்வேறு பிரிவினரின் நம்பிக்கை, வழிபாடு மற்றும் கடமை.
ஆனால், பிராமணர்கள் மட்டும் தான் பூணூல் அணிகிறார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்ற சில தீய சக்திகள் கடந்த 75 வருடங்களாக உருவாக்கி வந்துள்ளன. ஆனால், செட்டியார்கள், ஆயிரவைசியர்கள், பொற்கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள் என சமுதாயத்தின் பெரும்பாலோனோர் தங்களின், தங்கள் வாழ்வின் முக்கிய மாற்றங்களை குறிக்கும் அடையாளமாக பூணூல் அணியும், மாற்றும், சடங்குகளை கொண்டிருந்தார்கள்.
மற்ற சமுதாயங்களை பிராமண சமுதாயம் தான் அடக்கி ஆண்டது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிய ஏகாதிபத்திய ஆங்கிலேயர்களின் கைக்கூலிகள், அந்த சமுதாயத்தை சிதைக்க வேண்டும் என்ற முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் தான் பூணூல் அறுப்பு. ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு ஜாதி ரீதியாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் கொள்ளைக்கூட்டம் தான் பூணூல் அணிந்தவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்று குறிப்பிட்டு சமய அடையாளமான பூணூலை அறுக்கும் இழிசெயலில் ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு அடையாளம், சின்னம், நம்பிக்கை, வழிபாட்டு முறை இருக்கும். அந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வண்ணம் பேசுவது, செயல்படுவது என்பது சட்ட விரோதம். சமீபத்தில் திமுகவின் பவள விழாவில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பிராமண சமுதாயத்தினர் குறித்து பேசியதன் விளைவே திருநெல்வேலியில் பூணூல் அறுப்பு. திமுக ஆளும் கட்சியாக இருக்கலாம், அதற்காக ஒரு சமுதாயத்தை தரக்குறைவாக பேசுவதையோ, நடத்துவதையோ அனுமதிப்பது நல்ல அரசுக்கு அழகல்ல.
இதுவரையில் துரைமுருகன் அவர்களின் பேச்சையோ அல்லது தொடர்ந்து தமிழகத்தின் தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு சில அரசியல்வாதிகள் அல்லது அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரரின் பிராமண சமுதாயம் குறித்த விமர்சனங்களை கண்டிக்க அரசியல் கட்சிகள் முன்வராததற்கு காரணம் பிராமண வாக்காளர்கள் குறைவு அல்லது பிராமணர்கள் ஜாதி ரீதியாக வாக்களிப்பதில்லை என்ற எண்ணம். வேறு எந்த ஜாதியையும், ஜாதியினரையும் தமிழகத்தில் விமர்சனம் செய்து விட்டு நிம்மதியாக இருந்து விட முடியாது என்பதும், பிராமணர்களை விமர்சனம் செய்தால் அவர்கள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என்ற தைரியமும் தான் இந்நிலைக்கு காரணம்.
ராமானுஜர் தொடங்கி, பாரதியார், ராஜாஜி என சமூக நீதிக்கு வித்திட்ட பெரியோர்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்ட பல்வேறு தலைவர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், இந்திய ஆட்சிப்பணியில் சாதித்தவர்கள்,விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பட்டியல் ஏராளம். ஆனால், அவர்களையெல்லாம் ஒரு ஜாதிக்குள் அடைத்து விடாமல் சமுதாய முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு பங்களித்த சமூகத்தை இழித்தும், பழித்தும் பேசுவது சுயநலம் மட்டுமல்ல, அரசியல் அராஜகம்.
திருநெல்வேலியில் சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டுள்ளது வன்கொடுமை, கொலை மிரட்டல். உடனடியாக குற்றம் புரிந்த நபர்களை கண்டு பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் 'நான் எல்லோருக்குமான முதல்வர்' என்றுரைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமையாகும் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.