திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.17) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்.16,17ஆம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
அதேபோல் கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் தென்கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.17) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகள்
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகப்பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படும்.
புதுச்சேரி
புதுச்சேரியில் வரும் 18 முதல் 22ஆம் தேதிவரை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“