/indian-express-tamil/media/media_files/2025/09/24/nellai-chennai-vande-bharat-2025-09-24-11-54-27.jpg)
Tirunelveli to Chennai Vande Bharat Express nellai chennai Vande Bharat train ticket booking
திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் சென்னைக்கு இடையே பகல் நேர வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தென் மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையுடன் இயங்கி வந்த இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி மாதம் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்காக, சென்னை ஐ.சி.எஃப்-ல் புதிதாக ஆரஞ்சு மற்றும் சிமெண்ட் நிறத்திலான ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டன. இன்று முதல் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் புறப்பட்டுச் சென்றது.
கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டதன் காரணமாக, 312க்கும் மேற்பட்ட கூடுதல் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,440 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இதில் 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும்.
இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
ஏற்கனவே ஏழு மணி நேரத்தில் சென்னைக்கு சென்றடையும் இந்த ரயிலுக்கு தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயங்குவது தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.