வந்தேபாரத் ரயில், திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. சில கிலோமீட்டர் கடந்த நிலையில் வடமதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாக வேல்வார்கோட்டை கிராமப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது இன்ஜினை அடுத்துள்ள பயணிகள் பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. பெட்டி முழுவதும் புகை பரவத்துவங்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பின்னர் பயணிகள் ரயில் ஓட்டுநருக்கு அவசர அழைப்பு கொடுக்கும் அழைப்பு வழியாக அலாரம் அடித்தனர். இதைகேட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.
ரயில் ஓட்டுநர் மற்றும் அந்த ரயிலில் பயணித்த ஊழியர்கள் ரயிலை ஆராய்ந்தபோது ரயிலில் இருந்த ஏசி யூனிட்ல் இருந்து புகை கிளம்பியது தெரியவந்தது. இதையடுத்து, புகை வந்த பகுதியை ரயில் ஓட்டுநர்கள் தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அருகில் உள்ள பெட்டிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். இதனால் 30 நிமிடங்கள் வந்தே பாரத் ரயில் வேல்வார்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டது.
ரயில் பைலட் இதுகுறித்து திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். திண்டுக்கல்லை ரயில் சென்றதால், திருச்சி ரயில்வே ஊழியர்களின் ஆலோசனையின் பேரில் புகை வருவது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் வந்தேபாரத் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து மெதுவான வேகத்தில் திருச்சி நோக்கி வந்தடைந்தது.
திருச்சி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பணிமனை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுக்கு பிறகு, அவர்களின் ஒப்புதலின் பேரில் மீண்டும் வந்தேபாரத் ரயில் சென்னை நோக்கி தனது பயணத்தை துவக்கியது. அதிவேக சொகுசு வந்தே பாரத் ரயிலில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட இந்த திடீர் புகையால் பயணிகள் அலறி அடித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்.