Tirunelveli to Chennai Vande Bharat Train Ticket Price: திருநெல்வேலி - சென்னை இடையே வருகிற 24-ம் தேதி முதல் ‘வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.‘வந்தே பாரத்' எனப்படும் அதிவிரைவு ரயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
வந்தே பாரத் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதனிடையே, இன்று நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
கட்டணம்
இந்நிலையில், திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது. ரயில் முழுவதும் ஏ.சி வசதி உள்ளது. எனவே சாதாரண ஏ.சி வகுப்பில் ஜி.எஸ்.டி உட்பட 1,620 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே எக்ஸிக்யூடிவ் வகுப்பில் 3,025 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 பெட்டிகள் - 8 மணி நேர பயணம்
சென்னை- திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். அதில் ஒரு பெட்டி வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்படும். 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்தில் கடக்கும். காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“