தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளை தொடர்ந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆந்திர மாநில அறநிலைய துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியிடம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம், 1974 முதல், சென்னையில் இருந்து ஒரு நாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை இயக்கி வருகிறது. 1997ல், சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களின் விரைவான தரிசனத்துக்கு அனுமதி அளித்து, விரைவு தரிசன டிக்கெட்டுகளை,திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.
அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தினசரி 400 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இது பக்தர்களை பாதிக்கும் என்பதால், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆந்திரா அறநிலையத் துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை நேற்று சந்தித்தார். அப்போது திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு, மீண்டும் ஒதுக்கீடு செய்து வழங்க கோரிக்கை விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“