தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான 11, 12 ஆம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடுமையாக படித்து மாணவர்கள் தேர்வு நாள்களில் சுறுசுறுப்பாக சென்று தேர்வு எழுதி வருகிறார்கள். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்கிற அச்சத்தில், பேருந்தை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார்.
பேருந்தின் பக்கவாட்டில், அதனை பின் தொடர்ந்து ஓடியுள்ளார் அந்த மாணவி. பின்னர் படியில் இருக்கும் கம்பியை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து ஓடியுள்ளார். வெகு தூரம் இப்படி மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், பின்னர் ஒருவழியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில், திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் பணிமனையில் இருந்து சென்ற பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லாததால், ஓட்டுநர் முனியராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் உறுதியளித்துள்ளது.