திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாடுக் கட்டுப்பட்டு வாரிய செய்ற்பொறியாளர் அனிதா வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு நடத்தினார்.
திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்கு வாங்கப்பட்ட நெய்யில், மாட்டிறைச்சி கொழுப்பு நெய், மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்ததாக செய்திகள் வெளியானது. இதனால், ஆந்திராவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருப்பதியில் லட்டு தயாரிக்க திண்டுக்கல்லில் இருந்து கடந்த ஜூன், ஜூலையில் வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், திருப்பதில் லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாடுக் கட்டுப்பட்டு வாரிய செய்ற்பொறியாளர் அனிதா வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவன தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தனர்.
ஏ.ஆர் டெய்ரி நிறுவன தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் லெனி, கண்ணன், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய் தரமானது தான் என்று தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “ஜூன், ஜூலை என 2 மாதங்கள் தொடர்ச்சியாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது.
இந்த நிறுவனத்தின் மீது, நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது. அதில், எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை. அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கும் என்றால் வெளிப்படுத்தலாம். எங்களது நிறுவனத்தின் நெய் எல்லா இடத்திலும் உள்ளது. அதனை செக் பண்ணலாம். எங்கள் நெய்யின் தரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை. 25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இந்த மாதிரி எங்களது பொருள்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது.” என்று கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.
லட்டு தயாரிப்புக்காகவே ஒப்பந்தம் போடப்பட்டு,நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு பலர் நெய் அனுப்பி உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும், நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும், தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம்.” என்று தெரிவித்தனர்.
மேலும், ஏ.ஆர் டெய்ரி நிறுவன தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால், எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில், எந்த ஒரு குறைகளும் இல்லை என்றே கூறுகின்றனர். தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கைகளும் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்துச் சென்றுள்ளனர். அதில், இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை.” என்று தெரிவித்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.