திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி (AR Dairy) நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, லட்டு பிரசாத சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருந்தது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது. குறிப்பாக திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டது.
நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தானம் வெளியிட்டது. அதில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. நெய்யில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி கோவிலுக்கு நெய் அனுப்பிய ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், "எங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. எங்கள் மாதிரிகள் முதலில் தேசிய ஆயவகங்களில் பரிசோதனை செய்யப்பட்டன. எந்தப் பரிசோதனைக்கும் நாங்கள் தயார். விலங்கு கொழுப்பு கலப்படம் செய்திருந்தால் எளிதில் தெரிந்துவிடும். மீன் எண்ணெய் விலையும் அதிகம். தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் கலப்படம் இல்லை" என்று விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செப்டம்பர் 20 ஆம் தேதி ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மாதிரியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி காலை ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்து எடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் பகுப்பாய்வுக்காக சேகரித்தனர்.
இந்நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் 4 மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. கலப்படம் உறுதியானதாக கூறப்படும் நிலையில், விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“