உளுந்தூர்ப்பேட்டை திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக 4 ஏக்கர் நிலப் பட்டாவையும், ரூ .3.16 கோடிக்கான காசோலையை தமிழக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு நன்கொடையாக வழங்கினார்.
குமரகுரு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார். முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்ப்பேட்டை தொகுதி தலைமையகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தான குழுவுக்கு எம்.எல்.ஏ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியை சந்தித்த குமரகுரு, 4 ஏக்கர் நிலப் பட்டாவையும், ரூ .3.16 கோடிக்கான காசோலையையும் வழங்கினார்.
தமிழகத்தில் ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை 3 கோயில்களை பரமாரித்து வரும் நிலையில், நான்காவது கோயில் உளுந்தூர்ப்பேட்டையில் வரவுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.வி. சுப்பாரெட்டி, " இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில்களை பிரம்மாண்டமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழு உறுப்பினர் குமரகுரு வழங்கிய இடத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு 6.85 கோடி ரூபாயில் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. 30 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை பழம் பெரும் நடிகை காஞ்சனா நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் திருப்பதி கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil