/indian-express-tamil/media/media_files/2025/02/18/e807bDrIpVDcQfjwHTe0.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வரும் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அதன்பிறகு குலுக்கல் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் வரும் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் அதற்கான பணம் ஆன்லைனில் செலுத்தினால் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றிற்கான மே மாத டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதே சேவைக்கு நேரில் பங்கேற்காமல் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும். விர்சூவல் சேவைக்கு வரும் 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மே மாதம் அங்கபிரதட்சண இலவச டோக்கன்கள் வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து மே மாதம் விஐபி தரிசனத்திற்கு வரும் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் திருமலைக்கு செல்ல ஏதுவாக, மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 22 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும்.
திருமலை மற்றும் திருப்பதியில் மே மாதத்திற்கான அறைகள் பெற வரும் 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.