திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இந்த பணிகள் முடியும் வரை தெப்பக்குளம் மூடப்படும் .
இந்த ஆண்டு தூய்மைப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கோவில் தெப்பக்குளம் மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட உள்ளது. தண்ணீரை வெளியேற்றியதும், படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் புஷ்கரணி ஆரத்தி நடப்பது வழக்கம். இப்போது பராமரிப்பு பணிகளுக்காக தெப்பக்குளம் 1ம் தேதி முதல் மூடப்படுவதால் ஒரு மாதத்திற்கு புஷ்கரணி ஆரத்தி ரத்து செய்யப்படுகிறது.