திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்புக்குள் உலா வந்த சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பிடிபட்டது. திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று (ஜுன் 14) வழக்கம் போல் பள்ளி நடைபெற்று வந்தது. அப்போது மாலை 4 மணியளவில் பள்ளி வளாகத்தில் திடீரென்று நுழைந்த சிறுத்தை பள்ளியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் கோபால் (52) என்பவரை தாக்கியது. இதில், அவரது இடதுப்புறம் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தகவல் அறிந்த உடன் பள்ளி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு மாணவிகள் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பபட்டனர். அதற்குள் சிறுத்தை பள்ளியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரை தாண்டி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
அங்கிருந்த கார் ஷெட்டில் பதுங்கியது. அப்போது அங்கு இருந்த 5 பேர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு இருந்த காருக்குள் பதுங்கினர். காருக்குள் அவர்கள் இருப்பதை பார்த்த சிறுத்தையும் அவர்கள் அருகில் இருந்த மற்றொரு காருக்கு அடியில் பதுங்கியது.
இதையடுத்து இதுகுறித்தான தகவல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்தனர். காரில் சிக்கி உள்ளவர்களை பத்திரமாக மீட்கவும், சிறுத்தையை பிடிக்கவும் திட்டமிட்டனர். கிட்டதட்ட 5 மணி நேரத்திற்குப் பின் காரில் சிக்கியிருந்த ஆரோக்கியசாமி, தினகரன், இம்ரான், அஸ்கர் கான், வெங்கடேசன் ஆகியோரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ஐந்து பேருக்கும் முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணி நடைபெற்றது. கார் ஷெட்டை சுற்றி வளைத்த வனத்துறை சிறுத்தையை பிடிக்க ஓசூரில் இருந்து கூண்டு வரவழைத்தனர். தொடர்ந்து மயக்கி ஊசி செலுத்தை கூண்டில் அடைக்க முயற்சி செய்யப்பட்டது. அதன் படி, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய நிலையில் 11 மணி நேரத்திக்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. மண்டல வன பாதுகாவலர், கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“