திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) காலை நீண்ட நேரமாகியும் வயதான தம்பதியர் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தம்பதியர் அடித்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இந்த கொலைக்கு அந்த தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரர் ரமேஷ் என்பவரே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரமேஷின் தோட்டத்தில் இருந்து ஆடு, கோழிகள் கொலை செய்யப்பட்ட பழனிச்சாமியின் தோட்டத்திற்கு சென்றதால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/41e3438c-af3.jpg)
இந்த சூழலில், நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது மேற்கண்ட தம்பதியினர் ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அப்போது, ரமேஷ் பழனிச்சாமி, அவரது மனைவியை அருகில் இருந்து அறிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இன்று காலை விபத்தில் சிக்கிய ரமேஷ் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 நாட்களைக் கடந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது வயதான விவசாய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசி பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இ.பி.எஸ் கண்டனம்
இந்நிலையில், இந்தப் படுகொலை சம்பவத்துக்கு தமிழக எதிர் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், " வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023ம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச்,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. தி.மு.க., அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள போலீசார் மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றினால் தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி:க.சண்முகவடிவேல்.