திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தமிழக இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்குவது போன்ற வீடியோ அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14-ம் தேதி பனியன் நிறுவனத்தில் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்களும் இடையே பிரச்சனை நடந்துள்ளது. தேநீர் குடிக்க சென்ற போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் சிகரெட் புகைத்துள்ளனர். அப்போது அங்கு மது போதையில் தமிழக தொழிலாளர்கள் 4 பேர் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் ஒன்றி கூடி தமிழக தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் தகவலறிந்து வந்ததும் இருதரப்பும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை பெல்ட், கற்கள் கொண்டு துரத்தி துரத்தி தாக்குவது போன்று வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச் சம்பவம் சர்ச்சையானது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், “திருப்பூரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு இருவர் தேநீர் குடிக்க சென்றபோது ஏற்பட்ட பிரச்சினை இது. இதில் யாருக்கும் காயமோ, பாதிப்போ இல்லை.
இதை, தற்போது நடைபெற்றது போல சித்தரித்து பரப்பி வருகின்றனர். நாங்கள் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, ஒரு தனிப்படையும், சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து சைபர் கிரைம் தனிப்படையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/