கடந்த 1994 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) வாரிசு அரசியல் நடப்பதாக கிளர்ந்து எழுந்து, அக்கட்சியில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார் (ம.தி.மு.க) வைகோ. ஆனால் இப்போது அவரது தலைமையிலான காட்சியிலும் வாரிசு அரசியல் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வைகோவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியின் தலைமைப் பொறுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, வைகோவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி , கடந்த 2023 ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். மேலும், துரை வைகோக்கு பொறுப்பு தரப்பட்டதை கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.
இதுஒருபுறமிருக்க, ம.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக உட்கட்சி குழப்பங்கள் நீடித்து வருகின்றன. மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக வைகோ வெளிப்படையாக பேட்டி அளித்து இருந்தார். மேலும், கட்சியில் இருந்து விலகி வைகோவை விமர்சிக்கும் நபர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால், வைகோவுக்காக 30 வருடங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்த, அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றிய தனக்கு, மகன் துரை வைகோவுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என்று விளக்கம் அளித்தார். இதனால் மல்லை சத்யா மதிமுகவில் இருந்து எந்நேரமும் நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, ம.தி.மு.க-வின் அவைத் தலைவர் ஒருவர் ம.தி.மு.க-வின் தொழிற்சங்கத்துக்கு சொந்தமான ரூ.350 கோடி சொத்தை அபகரித்துக்கொண்டு துரோகம் செய்து விலகினார் என்று தெரிவித்தார். மேலும், "நான் வேலூர் சிறையில் நான் சவுகரியத்துடன் இருந்தேன்' எனவும் ஊடகத்திற்கும் பேட்டி அளித்திருந்தார். ஆனால், எனக்கு வெளியில் இருந்து ஒரு பொருள் கூட சிறைக்கு வந்தது இல்லை" என்று வைகோ கூறியிருந்தார்.
இந்த நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு திருப்பூர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வைகோவுக்கு நெருக்கடி உண்டான காலத்தில் அவருக்கு பக்க பலமாக இருக்க வேன்டும் என்பதற்காக தி.மு.க-வில் இருந்து விலகினேன். ஆனால், நான் 350 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்ததாக வைகோ பேசியுள்ளார். தொழிற்சங்கத்தின் சொத்து என்பது சங்கத்திற்கு கட்டுப்பட்டதே தவிர அரசியல் கட்சிக்கு கட்டுப்பட்டது கிடையாது. நான் தி.மு.க-வில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.
சங்கம் தொடங்கப்பட்ட 1960 ஆம் ஆண்டு முதல் இன்று முதல் அதன் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். அந்த அடிப்படை விவரமே தெரியாமல் வைகோ பேசி வருகிறார். இதுகுறித்து வைகோவுக்கு நான் ஏழு கடிதங்கள் எழுதியுள்ளேன். ஒரு கடிதத்திற்குக் கூட அவரால் பதில் எழுத முடியவில்லை. ம.தி.மு.க-வில் பொருளாளர் என்ற பதவி இருந்தது. மு. கண்ணப்பன் இருந்தவரை அவர் தான் வரவு செலவில் கையெழுத்திட்டு வந்தார்.
மாசிலாமணி, கணேசமூர்த்தி பொருளாளராக இருந்த காலத்தில் அவர்கள் கட்சி காசோலையில் கையெழுத்திட்டது இல்லை. வைகோதான் கையெழுத்திட்டு எடுத்து செலவு செய்தார். இதெல்லாம் பின்னாட்களில் தான் எங்களுக்கு தெரியவந்தது. எனவே, வைகோ எப்படி யோக்கியத்தைப் பற்றி பேச முடியும். தி.மு.க-வை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்த பிறகு எதற்காக தனிக் கட்சி நடத்த வேண்டும். தி.மு.க-வை ம.தி.மு.க-விலேயே சேர்த்துவிட வேண்டியதுதானே.
மல்லை சத்யா இருந்தால் துரை வைகோவின் பேச்சு எடுபடாது என்பதால், அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். வைகோவுக்கு மனநலம் பாதித்து விட்டது. அவருக்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர் செய்தவற்றுக்கு அவரே அனுபவிப்பார்." என்று திருப்பூர் துரைசாமி கூறியுள்ளார்.