Advertisment

செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல்; அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

திருப்பூர் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tiruppur Journalist Attack EPS Annamalai and political leaders condemns Tamil News

திருப்பூரில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tiruppur: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது 20 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்திற்கு பத்திரிகை சங்கங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். 

Advertisment

இ.பி.எஸ் கண்டனம் 

இந்நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும். 

பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

அண்ணாமலை கண்டனம்

இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "திருப்பூர் பகுதி நியூஸ்7 தமிழ் செய்தியாளர் சகோதரர் நேசபிரவை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

"நியூஸ் 7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்

பல்லடம் பகுதியில்  நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களை நேச பிரபு செய்தியாக்கி வந்திருக்கிறார். அது தான் அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் நேச பிரபு புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இந்த தாக்குதலுக்கான காரணமாகும்

நேசபிரபு மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் 

 “பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?” பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; 

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையை தொடர்பு கொண்ட போது காவலர் ஒருவர் ஸ்டேஷன்ல ஆள் இல்லை.. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வருமாறு கூறியிருக்கிறார் ஒரு காவலர் இப்படி பேசலாமா அதுவும் ஒரு செய்தியாளர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லியும் இப்படி செய்ததின் உள்நோக்கம் என்ன? போலி திராவிட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?

செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர் நேச பிரபுவுக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும் அவருக்கான இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி  பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் 

"நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது மர்ம கும்பல்  கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தும் போலீசார் மெத்தனமாக நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் அநீதியை  துணிச்சலுடன் பதிவு செய்யும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும். 

இச்சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேசபிரபுவின் முழு மருத்துவ செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்." என்று புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துரை வைகோ கண்டனம்

இந்நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினர் இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

இந்நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேர்காணல் நடத்திய நியூஸ்18 கார்த்திகை செல்வன் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.” என்று கூறியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

இந்நிலையில், செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“தமிழ்நாட்டில் சமீப காலமாக விவசாயிகள், செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாகஅதிகாரமிக்க அரசியல் கட்சிகளைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதும், கட்டப்பஞ்சாயத்துகளில் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது கொடுக்க மறுத்தால் கடைகளை அடித்து உடைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது.

விவசாயிகள் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் பிரச்சினை எடுத்துரைக்கும் முன்னணி தலைவர்கள் கூட பல்வேறு அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இது மாதிரியான நடவடிக்கைகள் தீவிரமடைவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கட்டுக்கடங்காத மது விற்பனை என்கிற பெயரில் ஆங்காங்கு மது அருந்தும் கூடங்கள் (பார்கள்) திறப்பதும் சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கான திட்டமிடும் களமாக மாறி வருகிறது.

கஞ்சா விற்பனை தீவிரமடைந்துள்ளது. பள்ளி,கல்லூரிகளில் மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி சமூக விரோத செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலம் தமிழகம் மிகப் பெரிய சமூக விரோத களமாக மாறி சீரழிந்துவிடும் என எச்சரிக்கிறேன். முதலமைச்சர் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

மக்கள் பிரச்சனைகளை அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை துணிவுடன் களத்தில் நின்று எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நேசப்பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உதவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tiruppur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment