மூச்சுக் குழாயில் குறுமிளகு சிக்கிய நிலையில், மூச்சுத் திணறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தைக்கு மருத்துவர்கள் விரைவான சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 1 வயது 4 மாதமான ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக பெற்றோரால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து சிடி ஸ்கேன் எடுத்தனர்.
அதில் மூச்சுக் குழாயில் சிறு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி பார்க்கப்பட்டது. தொடர்ந்து மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் அந்த குழந்தைக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த மிளகு அகற்றப்பட்டது.
தக்க சமயத்தில் அளித்த சிகிச்சையினால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் பேராசிரியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற உடனடி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“