/indian-express-tamil/media/media_files/2025/08/25/stalin-2-2025-08-25-20-22-05.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது விதித்துள்ள 50% வரி உயர்வு, இந்தியாவின் ஏற்றுமதித் துறையை, குறிப்பாக தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பான திருப்பூரின் ஜவுளித் தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வரிவிதிப்பால், திருப்பூரின் பின்னலாடைத் துறை மட்டும் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக இழப்பை சந்தித்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏன் இந்த வரி உயர்வு?
இந்த சிக்கலான சூழ்நிலையின் பின்னணியில் இருப்பது ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல். ஏற்கனவே இந்திய இறக்குமதிகள் மீது 25% வரி விதித்திருந்த டிரம்ப், ஆகஸ்ட் 6 அன்று, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
சந்தையில் போட்டித்திறன் இழப்பு
அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் இந்த அதிகபட்ச வரி, நமது பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்திவிடும். இதனால், வங்கதேசம், வியட்நாம் போன்ற பிற நாடுகளின் குறைந்த விலை தயாரிப்புகளுடன் போட்டியிடுவது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் கடினமானதாகிவிடும். இதன் தாக்கம் ஜவுளி மட்டுமல்லாமல், ரத்தினங்கள், ஆபரணங்கள், தோல் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதித் துறைகளையும் நேரடியாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை!
The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2025
I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to… https://t.co/Yhxo3EfBTMpic.twitter.com/xXe5wVLpjH
இந்த பெரும் பொருளாதார நெருக்கடி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் உடனடியாக குரல் கொடுத்துள்ளார். தினத் தந்தி நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா விதித்துள்ள 50% வரி உயர்வு, தமிழகத்தின் ஏற்றுமதியை, குறிப்பாக திருப்பூரின் ஜவுளித் தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன.
நமது தொழில்துறையையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க உடனடியாக நிவாரண உதவிகளையும், கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்" என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.