/indian-express-tamil/media/media_files/2025/08/06/tirupur-police-ssi-murder-tn-cm-mk-stalin-relief-fund-tamil-news-2025-08-06-11-09-46.jpg)
அ.தி.மு.க எம்.எல்.ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எஸ். எஸ்.ஐ. சண்முகம் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட நெல்லையில் கவின்குமார் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இப்படியான சூழலில் திருப்பூரில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை இரண்டு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு வயது 52. இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு நேற்று இரவு தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சண்முகவேல் குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு விரைந்துள்ளார்.
அங்கு தந்தை மகனுக்கு இடையே பிரச்சனை நடந்துள்ளது. அந்தத் தோட்டத்தில் மகன் தங்கபாண்டியன், தந்தை மூர்த்தி ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவருக்கும் மது போதையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கு தந்தை, மகனை அரிவாளுடன் வெட்ட முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்து தனது ஓட்டுநருடன் வந்த சண்முகவேல் இருவருக்கும் இடையே ஆன பிரச்சனையை முடித்து வைக்க முயன்றார்.
அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சண்முகவேலை கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும், அவருடன் வந்த ஓட்டுநரையும் வெட்ட முயன்றுள்ளார். உடனே அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற ஓட்டுனர், இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சண்முகவேலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ தோட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக, குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின், பணியில் உயிரிழந்த எஸ்.ஐ சண்முகசுந்தரம் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் நிவாரணம் வழங்கியும் தனது இரங்கலை முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ். எஸ்.ஐ. சண்முகம் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்த கொடூரமான தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவரை இழந்தமைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்துள்ளேன். காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் நீதியமைப்பு நிலைத்திருப்பதை உறுதி செய்ய அரசு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.