கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது.
ரயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
18 ரயில்கள் ரத்து
இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்.இ.எம்.யூ ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூளூர்பேட்டை - நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்.இ.எம்.யூ ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேவை மாற்றி அமைப்பு
இதனிடையே, கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக சில ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, 12663 ஹவுரா- திருச்சி ரயில் எழும்பூர் வராமல் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியே செல்லும்.12511 கோரக்பூர்- கொச்சுவேலி ரயில் சென்னை வராமல் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியே இயக்கப்பட உள்ளது.
22663 எழும்பூர்- ஜோத்பூர் ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழியே செல்லும். 22606 நெல்லை- புரூலியா ரயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா வழியே இயக்கப்பட உள்ளது. 12603 சென்னை- ஐதராபாத் ரயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா வழியே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Watch | கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
— Sun News (@sunnewstamil) October 12, 2024
கிடைக்கும் ரயில்களில் ஏறி ஊருக்குச் செல்ல முயல்வதால், ரயில்களில் முண்டியடித்து ஏறி வருகின்றனர்.#SunNews | #TrainAccident |… pic.twitter.com/zFH0BnD8UK
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.