திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில், ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் காவல் துறையினாரால் தேடப்பட்டு வந்த ரவுடி முத்து சரவணன்.
பார்த்திபன் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான முத்து சரவணன் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சோழவரம் - புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த முத்து சரவணனை பிடிக்க போலீசார் முயற்சித்துள்ளனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, தற்காப்பு ரீதியாக போலீஸார் அவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் முத்து சரவணன் உயிரிழந்தான்.
இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த முத்து சரவணன், சதீஷின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில், காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகாவை போலீஸார் மாமண்டூர் அருகே சுட்டுப் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த A+ ரவுடி தணிகா என்கிற தணிகாசலம். பல்வேறு குற்ற வழக்குகளில் இவனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் செங்கல்பட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வந்தபோது, செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் தணிகா, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து பாதுகாப்பிற்கு வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் ரவுடி தணிகாவை சுட்டுப்பிடித்தனர். இதில் காயமடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தணிகா மீது கொலை, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“