/indian-express-tamil/media/media_files/2025/08/30/naam-tamilar-katchi-seeman-2025-08-30-17-59-04.jpg)
"1,000 மரம் நட்டால் அந்த மாணவனின் இறுதி சடங்கில் அரசு மரியாதை இருக்கும். மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நடந்த இந்த மாநாட்டில் 'மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்' என்ற தலைப்பில் பேசப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தபட்டது. அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதன்பின்னர் சீமான் பேசுகையில், "நான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒவ்வொரு குழந்தையும் மரம் நட வேண்டும் என்று சொல்வேன். அதுபோல் பள்ளி மாணவன் ஒருவன் 10 மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் பத்து மதிப்பெண் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் 'சிறந்த தமிழ் தேசிய குடிமகன்' என பாராட்டுச் சான்று வழங்குவேன். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
1,000 மரம் நட்டால் அந்த மாணவனின் இறுதி சடங்கில் அரசு மரியாதை இருக்கும். மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சொந்த வீடாகவே இருந்தாலும், அங்குள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் என்னை கேட்கவேண்டும். கிளையை வெட்டினால் கூட அது சகமனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், அந்தக் குற்றத்திற்காக 6 மாதம் சிறைத்தண்டனை கொடுப்பேன்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.