திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்கதர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை வரை தினசரி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் கடந்த வாரம் உத்தரவிட்டது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ரயில் சேவை இன்று (மே 3) முதல் தொடங்கப்பட உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50-க்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் இந்த ரயில் சேவைக்கான கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“