"நானும் உங்களை போல் கலெக்டராக வேண்டும்”, எனக்கூறிய மாணவியை தன் கார் இருக்கையில் அமரவைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஊக்கப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் உள்ள லோட்டஸ் ஷூ தொழிற்சாலை சார்பாக, அரசு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்துகொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அப்போது, செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஷா, கடந்த 10-ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் பெற்றதற்காக, மாவட்ட ஆட்சியர் ஊக்கத்தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்.
அப்போது, “நானும் உங்களைப்போல் கலெக்டராக வேண்டும். இதுவே என் லட்சியம்”, என மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும், மாவட்ட ஆட்சியர் மாணவி மோனிஷாவை தன்னுடைய சைரன் பொருந்திய அரசு காரில், தான் அமரும் இருக்கையில் அமர வைத்தும், அருகில் அவர் நின்றுகொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
“இந்த புகைப்படத்தை பார்க்கும்போது கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் உதிக்க வேண்டும். நானும் அரசு பள்ளியில் படித்துதான் கலெக்டர் ஆனேன்”, எனக்கூறி ஊக்கப்படுத்தினார். இதையடுத்து, மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.