Tiruvannamalai Election Results 2024 Live Update: திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிகையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரை வாக்குகள் 5,47,379 பெற்று 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் கலியபெருமாள் 3,13,448 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.
பா.ஜ.க வேட்பாளர் அசுவாத்தாமன் 1,56,650 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.
இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 83,869 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்தார்.
மதியம் 3 மணி நிலவரப்படி: தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 2,44,951 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அ.தி.மு.க வேட்பாளர் கலியபெருமாள் 1,28,567 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் அசுவத்தாமன் 70,423 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
வட தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில், அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியானது, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஆகும்.
திருவண்ணாமலை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,21,787; ஆண் வாக்காளர்கள்: 7,49,000 பெண் வாக்காளர்கள்: 7,72,669; மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 118 ஆவர். 2024 மக்களவைத் தேர்தலில் 11,38,102 வாக்குகள் பதிவாகி 74.24 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் சி.என். அண்ணாதுரை உதயசூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் எம். கலியபெருமாள் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க சார்பில் ஏ. அசுவத்தாமன் தாமரை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வி. ரமேஷ்பாபு மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் வரலாறு:
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 2009-ம் ஆண்டு முதல் 2024 தற்போது வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
15வது மக்களவைத் தேர்தல் (2009)
2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட த. வேணுகோபால் 4,73,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் 2,88,566 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட எஸ். மணிகண்டன் 56,960 வாக்குகள் பெற்றார்.
16 வது மக்களவைத் தேர்தல் (2014)
2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட, சி.என். அண்ணாதுரை 3,32,145 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதே போல, பா.ம.க சார்பில் போட்டியிட்ட எதிரொலி மணியன் 1,57,954 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. சுப்ரமணிய 17,854 வாக்குகள் பெற்றார்.
17-வது மக்களவைத் தேர்தல் (2019)
2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை, 6,66,272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி 3,62,085 வாக்குகள் பெற்று பெற்று தோல்வி அடைந்தார். அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட ஞானசேகர் 38,639 வாக்குகள் பெற்றார். நா.த.க சார்பில் போட்டியிட்ட ரமேஷ்பாபு 27,503 வாக்குகள் பெற்றார். ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட அருள் 14,654 வாக்குகள் பெற்றார்.
18-வது மக்களவைத் தேர்தல் (2024)
இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் திருவண்ணமலை மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி-யாக உள்ள சி.என். அண்ணாதுரை போட்டியிட்டுள்ளார்.
அ.தி.மு.க சார்பில் எம். கலியபெருமாள் போட்டியிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் ஏ. அசுவத்தாமன் போட்டியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வி. ரமேஷ்பாபு போட்டியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.