Advertisment

மேல்மா சிப்காட் போராட்டம்: விவசாயிகளுக்கு ஜாமீன்; குண்டர் சட்டம் தொடரும் - கோர்ட் உத்தரவு

மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

author-image
WebDesk
New Update
Tiruvannamalai district court bail to Melma protesters Goondas Act to stay Tamil News

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வேளாண் உரிமை செயற்பாட்டாளர் ஆறுமுகம் அருள் உள்ளிட்ட 20 விவசாயிகளுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி மதுசூதன் உத்தரவிட்டார்.

Thiruvannamalai | Farmer-protest: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக, அப்பகுதியில் உள்ள 11 ஊராட்சிகளில்  3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்பட கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 126 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெற்றது. 

Advertisment

கைது - குண்டாஸ் வழக்கு 

இந்நிலையில், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். அந்த போராட்டத்தின் போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேரை கடந்த 4-ம் தேதி கைது செய்த போலீசார் அவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். இவர்களில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. 

ரத்து 

தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர், அ.ம.மு.க பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 17ம் தேதி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

ஜாமீன்

இந்நிலையில், மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேருக்கு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் தொடரும் என்றும், அதன் விசாரணை தனியாக நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எம். அன்பழகன் வலியுறுத்தினார். அப்போது 6 விவசாயிகளின் ஜாமீன் மனுக்களை ஏற்க முடியாது என்று அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன் நீதிபதியிடம் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு பத்திரிகை செய்திகளை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர், திருவண்ணாமலை ஆட்சியர் அதிகாரிகளிடம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததற்கான உறுதி நகலை அரசு வழக்கறிஞர் மனோகரன் பெற்றார். "திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தான் உத்தரவின் உறுதிப்படுத்தல் நகல் எனக்கு கிடைத்தது" என்று கூறினார்.

தொடர்ந்து நேற்று மாலையில் ஆறுமுகம் அருள் உள்ளிட்ட 20 விவசாயிகளுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி மதுசூதன் உத்தரவிட்டார். 20 விவசாயிகளில் 13 பேர் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ள 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவு இன்னும் சிறைக்கு வரவில்லை. மேலும், 6 விவசாயிகளில் இருவர் மீது பதிவு செய்யப்பட்ட 2வது எப்.ஐ.ஆரில் ஜாமீன் பெற வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thiruvannamalai Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment