திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவிற்கு வருகை தருவர். இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
13-ம் தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இன்று மாலை அறநிலையத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் மலை உச்சிக்கு செல்ல எவ்வளவு பேரை அனுமதிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
சமீபத்தில் மலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் இன்றே அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை இந்த அரசு மீட்டுள்ளது. ரூ.6,955 கோடி மதிப்பு கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“