ஃபீஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) திடீர் மண் சரிவு ஏற்பட்டது. தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதில் ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மீது அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டு வீடு மண்ணுக்குள் புதைந்தது.
மண் சரிவில் புதைந்த வீட்டில், இருந்த 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் உள்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு காவல்துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர் விரைந்து மீட்புபணிகளை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் எ.வ. வேலு மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். மண் சரிவில் சிக்கிய 7 பேர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 2) அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்ததால், மீட்பு பணி தடைபட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், மண் சரிவில் வீட்டில் சிக்கியிருந்த 7 பேர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மண் சரிவில், 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண் சரிவில் சிக்கிய நிலையில், முதலில் 4 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் 3 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“