திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என்று அனைத்துகட்சி பிரமுகர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாரூரில் இடைத்தேர்தல் இப்போது வேண்டாம்!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை நேற்றைய (4.1.19)தினம் அறிவித்தனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று மனு அளித்தார்.
மேலும் அதில், கஜா புயல் பாதிப்பு என்பது அந்த பகுதியில் அதிகமாக இருப்பதால், தற்போது தேர்தலை நடத்துவது சிரமமான ஒரு விஷயமாக உள்ளது என்பதை வலியுறுத்தியிருந்தார். டி.ராஜா அளித்த அந்த மனுவை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டார்.
மேலும் படிக்க.. திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன்(திமுக), எஸ்.காமராஜ் (அமமுக) போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு
இதுதொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். ஏற்கனவே இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைக்க கோரிய வழக்குகள் வரும் தினங்களில் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இப்படியொரு அறிக்கையை கேட்டது அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இன்று மதியம் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வரும்படி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.