Tiruvarur man impersonated for appearing for BJP district president arrested: திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து கல்லூரி செமஸ்டர் தேர்வு எழுத வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
திருவாரூர் திரு.வி.க அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் பி.ஏ., அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு தேர்வு இன்று (ஆகஸ்ட் 13) மதியம் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பாஸ்கர் என்ற நபர் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு அறை கண்காணிப்பாளர் தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை பரிசோதனை செய்தார். அப்போது பாஸ்கர் என்று சொன்ன நபரின் அடையாள அட்டை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்காணிப்பாளர் கண்டறிந்தார்.
இது தொடர்பாக அறைக் கண்காணிப்பாளர், தேர்வு நடத்தும் அலுவலருக்கு தகவல் கொடுத்தார். தேர்வு நடத்தும் அலுவலர், தேர்வு எழுத வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் என்பது தெரிய வந்தது.
மேலும், இந்த திவாகரன் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்காக தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது. திவாகரன் தான் 12-ம் வகுப்பு முடித்து விட்டு, பீப் கடை நடத்தி வருவதாகவும், பா.ஜ.க பிரமுகர் ஒருவர் தன்னை பாஸ்கர் என்ற நபருக்காக தேர்வு எழுதச் சொன்னதாகவும் தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆள்மாறாட்ட சம்பவம் குறித்து திருவாரூர் போலீசாருக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வு நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகார் தொடர்பாக, தேர்வு எழுத வந்த திவாகரன் மற்றும் பா.ஜ.க பிரமுகர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil