/indian-express-tamil/media/media_files/2025/07/10/whatsapp-image-2025-2025-07-10-15-12-25.jpeg)
Tiruvarur
தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருவாரூர் வந்தார். பின்னர் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுத்த பிறகு கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து கருணாநிதி சிலையை திறந்து வைத்த ஸ்டாலின், கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை பார்த்தார். பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ சென்றார். இதற்காக சாலையின் இருபுறமும் கம்பி தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இருபுறமும் திரண்டிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களை பார்த்து கை அசைத்து, கை குலுக்கி உற்சாகமாக நடந்து சென்றார்.
ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் பலரும் மனுக்கள் கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர். ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் சென்றனர். மாவட்டச்செயலாளர் பூண்டி கலைவாணன், ரோடு ஷோவில் ஸ்டாலினை பார்பதற்காக நின்ற முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியினர் குறித்து எடுத்து கூறினார். செல்ஃபி எடுத்தவர்களிடம் செல்போனை வாங்கி தானே உற்சாகமாக செல்ஃபி எடுத்தார்.
கிட்டதட்ட ஆறு கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்ற ஸ்டாலின் திருவாரூர் மேம்பால ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலையை அடைந்தார். அங்கு திரண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்டாலினை வரவேற்று கோஷமிட்டனர். இதையடுத்து 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் முழு உருவச் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார். பூண்டி கலைவாணன் ரோடு ஷோவில் 80,000 பேர் பங்கேற்கின்ற வகையில் ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை டி.ஆர்.பி.ராஜாவுக்கும், கலைவாணனுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. திருவாரூர், நன்னிலம் தொகுதிகளில் டி.ஆர்.பி.ராஜா தலையிடுவதில்லை.
இதே போல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கட்சி தொடர்பாக நடக்கும் உள் விவகாரங்களில் கலைவாணன் மூக்கை நுழைப்பதில்லை என்கிறார்கள். இருவரது ஆதரவாளர்களும் தனி தனி கோஷ்டிகளாக இருகின்றனர். டி.ஆர்.பி.ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோது கூட பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர்.
இப்படி இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி பூசல் நீரு பூத்த நெருப்பாக தொடர்ந்து வருகிறது.
அதேநேரம், ஸ்டாலினை வரவேற்று திருவாரூர் முழுவதும் பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். இதில் மறந்தும் கூட டி.ஆர்.பி.ராஜா போட்டோவை போடாமல் தவிர்த்தனர். இதே போல் மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளர்கள் கலைவாணன் போட்டோ போடுவதில்லை. கோஷ்டி பூசல்கள் இல்லைனு இரு தரப்பும் மறுத்தாலும் ஸ்டாலின் ரோடு ஷோவில் ஓட்டப்பட்ட போஸ்டரில் இது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக கட்சியினர் சிலர் தெரிவித்தனர்.
தேர்தல் நேரம் நெருங்கும் நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த மண்ணில் திமுகவினரின் கோஷ்டி பூசல் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.