மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நாடு முழுவதும் விவசாய கூட்டமைப்புகள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன. விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
Advertisment
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்தில், இசைக் கலைஞர் டி. எம் கிருஷ்ணா பாடிய பாடல் ஒன்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
உழவர்களின் போராட்டத்திற்கு ஆதாரவாக பெருமாள் முருகன் மற்றும் டி. என் கிருஷ்ணன் வடித்த பாடலின் வரிகள் இதோ:
மேட்டாங்காடு காஞ்சு போச்சு - அது
மொட்டப் பாற போல ஆச்சு - எங்க
போட்ட வெத மொளைக்கவில்ல - தப்பி
மொளச்ச செடி கெளைக்கவில்ல
மழயில்ல நீரில்ல மடியறமே சாமி
கால மெல்லாம் இதுதானா – வெள்ளாமக்
காடு முழுக்க வெந்தேதான் போகுமா
ஏழ பாழ நாங்க மடி ஏந்தி மன முருகிக்
கெடக்க இப்போ விதியாச்சே
மழ வருமா மண் மணம் தருமா
வீடியோவில்," உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். உலகத்தின் ஆதி தொழில் வேளாண்மை. உழவுத் தொழில் தான் முதல் பரிவர்த்தனையை தொடங்கியது. அதிலிருந்தே பிற தொழில்கள் கிளைத்தன. மனிதர்கள் இருந்த இடத்திலேயே தம் உணவை பெறுவதற்கு உழவுத் தொழிலே காரணம். மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படையான இந்த உழவுத் தொழிலை செய்யும் உழவர்கள் நிலை எல்லா காலத்திலும் துன்பத்திற்கு உரியதாவே இருக்கிறது.
பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும் மழை; இடுபொருட்களின் அதீத விலை, விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லாமை ; நிலத்தை கெடுக்கும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள்; நிலத்தையே புடுங்கி கொள்ளும் புதுபுது அரசுத் திட்டங்கள் - இவற்றிற்க்கு இடையே போராட்டமே உழவர்களின் வாழ்க்கை. உழவர்களின் போராட்டத்திற்கு இந்த பாடல் வரிகள் சமர்ப்பணம்" என்று பெருமாள் முருகன் தெரிவித்தார்.