‘சிறை வாசமா..சுதந்திர காற்றா..’ முடிவில்லா ரிவால்டோ யானையின் விவாதம்

விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கூறிய நீதிபதிகள், காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

ரிவால்டோ என்பது பிரேசிலியனோ அல்லது கால்பந்து நட்சத்திரமோ இல்லை. பல ஆண்டுகளாக யானைகள் மீது அதிக பாசம் கொண்ட பாதுகாவலர் ஓய்வுபெறுவதற்கு முன்பு, யானைக்கு வைத்த பெயர் தான் அது. வனப் பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கான கோரிக்கை மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்த நிலையில், மீண்டும் அதன் மீதான விவாதம் டிசம்பர் 7 ஆம் தேதி வரவுள்ளது.

யானை – மனித எதிர்கொள்ளல் நிகழும்போதெல்லாம், யானைகளைப் பிடிக்க வேண்டுமென வனத்துறையினரிடம் உள்ளூர் மக்கள் வலியுறுத்துகிறார்கள். இப்படிப் பிடிக்கப்படும் காட்டு யானைகள் பெரும்பாலும் க்ராலில் அடைக்கப்பட்டுப் பழக்கப்படுகின்றன. க்ரால் என்பது வெறு எதுவும் இல்லை பெரிய குண்டு தான்.

க்ராலில் அடைக்கப்பட்ட ரிவால்டோ என்கிற யானையைத் திரும்பக் காட்டுக்குள் விடுவது என்கிற ஆக்கபூர்வ முடிவை வனத்துறை ஆகஸ்ட் 2 அன்று செயல்படுத்தியது. தமிழகத்தில் க்ராலில் அடைக்கப்பட்ட யானை ஒன்று காட்டுக்குள் விடப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இருப்பினும், ரிவால்டோவை காட்டில் விடுவதா இல்லை க்ராலில் வைப்பதா என்ற விவாதம் முடிந்தபாடில்லை.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ என்கிற இந்தக் கொம்பன் யானை, மே மாதம் பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்தின் வாழைத்தோட்டம் பகுதியில் க்ராலில் அடைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. ஆனால், ரிவால்டோ யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்ததால், வன அதிகாரிகள் என்ன செய்வதென்று விழித்து வருகின்றனர்.

யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல உத்தரவிடக்கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் முரளிதரன், ரிவால்டோவை மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவது சரியான முடிவல்ல. அது பயிர்களை நாசம் செய்தால், விவசாயிகள் யானையை தாக்க வாய்ப்புள்ளது.ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். ஆனால் தும்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அதனால் உணவை முழுமையாக சாப்பிட முடியாமல் பாதி உணவு மற்றும் தண்ணீர் கீழே விழுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்து தெரிவித்து காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இவ்விவகாரம் குறித்து பேசிய யுனைடெட் கன்சர்வேஷன் மூவ்மென்ட் (யுசிஎம்) இயக்கத்தின் பாதுகாவலர் மற்றும் காடுகளில் ரிவால்டோவை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினருமான விஜய் கிருஷ்ணாராஜ், “ரிவால்டோ யானை யானை மிகவும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. 2012 முதல் ரிவால்டோவை நான் பார்த்து வருகிறேன். ஆக்ஸ்ட் மாதம் வனப்பகுதிக்குள் விட்டபோது, மீண்டும் வந்துவிட்டது. தற்போது, முதுமலை புலி சரணாயல பகுதியில் உள்ளது.

தற்போது, ரிவால்டோ இருக்கும் பகுதியில் கூடுதலாக ஆறு யானைகள் உள்ளன. இந்த நடைபாதையை ஆண்டுதோறும் 400 யானைகள் உபயோகித்து வருகின்றன. ரிவால்டோ பாதுகாப்பாக உள்ளது. அதன் காயங்கள் முற்றிலும் சரியாகிவிட்டன். அதனை மீண்டும் பிடித்து 3 மாதம் க்ராலில் வைப்பது தேவையில்லாத ஒன்று. சாப்பிடுவதில் ரிவால்டோவுக்கு சிரமம் இருந்தால், அதனால் இத்தனை நாள்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

மறைந்த வன பாதுகாவலர் மார்க் டேவிடர், இளம் யானைகளைக் கவர பிரேசில் வீரர்களின் பெயர்களை சுட்டியிருந்தார்.ராபர்டோ கார்லோஸ், ரொனால்டோ, காகா, கஃபு என அதன் பட்டியல் இருந்தது. ஆனால் அவற்றை காலப்போக்கில் ட்ரெக் செய்வது இயலாமல் போனது. தற்போது, ரிவால்டோ மட்டுமே கண்காணிப்பில் உள்ளது ” என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn again sees debate over rivaldo elephant

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com