Advertisment

Agri Budget 2023: சிறந்த இயற்கை விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு, தொழில்நுட்பங்களை அறிய வெளிநாட்டில் பயிற்சி: வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN agri budget

TN agri budget 2023

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை, சிறந்த இயற்கை விவசாயிக்கு பரிசுத் தொகை, காவிரி டெல்டாவில் ரூ. 1000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Advertisment

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  1. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 2504 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும்.
  2. சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம்: 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    நெல் சாகுபடிக்குப் பின் சிறுதானிய சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும். சம்பா நெல் அறுவடைக்குப் பின்னர் சிறுதானியங்கள் பயறு உள்ளிட்ட சாகுபடிகள் ஊக்குவிக்கப்படுகிறது.
  3. தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  4. கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.
  5. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 செயல்படுத்தப்படும். 3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர்.
  6. எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். ரூ. 33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய காந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்
  7. மதுரை மல்லிகைக்கு இயக்கம் - மல்லிகை பயிர் வேளாண் முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தர ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  8. தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க நடவடிக்கை - தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 19 கோடி, வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  9. ரூ.5 லட்சம் பரிசு - சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும் இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
    வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்.
  10. வேளாண் தொழில்நுட்பங்களை அறிய விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி. வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
  11. பண்ணைச் சுற்றுலா - பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா அழைத்து செல்லப்படும்.
  12. தேனி மாவட்ட வாழைக்கு தனி தொகுப்பு திட்டம் - உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கம் தனி தொகுப்பு திட்டம் அறிமுகம். ரூ. 130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
  13. பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு - மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  14. சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  15. முந்திரி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை. விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஏக்கரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  16. 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு - அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, மதுரை செங்கரும்பு, விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, வீரமாங்குடி அச்சுவெல்லம், சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  17. பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். வட்டியில்லா கடனாக ரூ. 1500 கோடி பயிர்கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  18. ரேஷன் கடைகளில் கேழ்வரகு, கம்பு - கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும். நீலமலையில் ரூ.50 கோடி செலவில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம்
    பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். வண்டல் மண்ணை விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  19. பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்படும்.
  20. நெல் கொள்முதல் விலை உயர்வு - நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ. 75, சன்ன ரகத்திற்கு ரூ. 100 கூடுதலாக வழங்கப்படும்.
  21. இலவச மின்சாரம் வழங்க ரூ. 6,536 கோடி ஒதுக்கீடு. 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  22. வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க குழு - யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனிக் குழு அமைக்கப்படும்.
  23. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
  24. விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Agriculture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment