தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என்றாலும், விவசாயிகளின் பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமே என்கின்றனர் விவசாய சங்கங்கள்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.இளங்கீரன் நம்மிடம் தெரிவிக்கையில், "விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது. இந்த பட்ஜெட் வரவேற்க்கத்தக்க பட்ஜெட்டாக கருதுகின்றேன். மண் வளத்தை காக்க ஒரு திட்டம் வேண்டும் என விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நான் வலியுறுத்தியிருந்தேன். அதற்கேற்றாற்போல் இன்று மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 2024- 2025 ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். மண்ணை கெடாமல் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் வகையில் இது அமைந்திருக்கின்றது.
மண்ணில் கரிம கார்பன் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி, பயிர்களுக்கு ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கப்பெற்று மகசூல் அதிகரிக்கும். எனவே, பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில், முதற்கட்டமாக 2024- 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினால், தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
மண்புழு உரம் வளமான ஊட்டச் சத்துகளை வழங்குவதோடு மட்டுமின்றி, மண்ணின் தன்மையையும் மேம்படுத்துகிறது. எனவே, மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் வரவேற்கின்றேன்.
களர் நிலத்தில், மண் இறுகியும் காற்றோட்டம் இல்லாமலும், அமில நிலத்தில் நுண்ணுயிர்ச் செயல்பாடுகள் குறைந்தும், பயிர் வளர்ச்சியும், மகசூலும் குறைந்தும் காணப்படுகிறது. இதனைச் சீர்செய்யும் பொருட்டு, 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பால் களர் நிலம் பசுமை நிலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல், 2024-2025-ம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும் என்ற அறிவிப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது. சிறுதானியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கதாகும்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, 200 மெ.டன் பாரமரிய நெல் ரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு மனதுக்கு நிறைவாக இருக்கின்றது. விளை நிலங்களில் சொட்டு நீர் அல்லது நுண்ணீர்ப் பாசனம் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியிருப்பதற்கும் எனது பாராட்டுகள்" என்றார் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன்.
தமிழ்நாடு அரசு நான்காவது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்.,"தமிழ்நாடு அரசு 4வது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்கக் கூடியதாகும். அதே நேரத்தில் மண்ணுயிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிமுகப்படுத்தி இருப்பதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர,தேவையான அளவு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குறைபாடு நீடித்துக் கொண்டிருக்கிறது.
கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள் களைக்கொல்லி போன்றவை விற்பனையை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மனிதருக்கு மருத்துவர்கள் சான்று இன்றி மருந்து பெற முடியாது. ஆனால் விவசாயிகளுக்கு கட்டுக்கடங்காத பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை கடைகள் தன் விருப்பத்திற்கு விற்பனை செய்து கொள்கின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மண்ணுயிர் பாதுகாப்பு பொருத்தமற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அறிவிப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் விளம்பரமாகவே தொடர்கிறது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளாக கலைஞர் வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்கள் கூட பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கு அனுமதிக்காமல் வெறும் வாசிப்பது மட்டுமே சம்பிரதாய சடங்காக மேற்கொள்வது விவசாயிகளுடைய பாதிப்புகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் தீர்வு காண வழி வகுக்காது. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்த ஆண்டு வாசிப்பதால் எந்த பயனும் இருக்காது.
எனவே ஏற்கனவே கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000-ம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக வழங்குவோம் என்று 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்தது. அது குறித்து இன்றுவரையிலும் வாய் திறக்காமல் இருப்பதும் பட்ஜெட்டை மட்டுமே மிகைப்படுத்தி பேசுவது விவசாயிகளை ஏமாற்றுவது. இதனால் அரசு தான் ஏமாறப் போகிறது. எந்தெந்த துறைகளின் கீழ் எவ்வளவு நிதி பெறப்படுகிறது? எந்த வகையில் பட்ஜெட்டுக்கான நிதி முதலீடுகள் ஈர்க்கப்படுகிறது என்பது குறித்து இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
எனவே ஏதோ விளம்பரத்திற்காக பட்ஜெட்டை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் விவசாயத்திற்கு எந்த பயனும் அளிக்காது. குறிப்பாக காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு திட்டம், ஏரிகள் பாசன வடிகாள்கள் மற்றும் ஆறுகள் தூர்வாருவதற்கான சிறப்பு திட்டங்கள் குறித்து எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால் இந்த பட்ஜெட் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர். எனவே உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000-மும், வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பருப்பு உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்களை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தில் ( நியாய விலைக் கடைகளில்) பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும். பாமாயில் விற்பனையை தடை செய்ய வேண்டும். இது குறித்தான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பொது விநியோகத் திட்டத்தில் தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில் தேங்காய் எண்ணெய்யை உடனடியாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
மத்திய அரசு இரசாயன உர பயன்பாட்டிற்கு கடந்தாண்டு வழங்கி வந்த மானிய தொகை ரூபாய் 2.60 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.60 லட்சம் கோடியாக குறைத்து விட்டது. இந்நிலையில் உர தட்டுப்பாடும், விலையற்றமும் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் நினைப்பது தவறில்லை. ஆனால் இதனை ஈடு செய்கிற வகையில் இயற்கை உர விற்பனைக்கும், உற்பத்திக்கும் உரிய மானிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமே" என்றார் பி.ஆர்.பாண்டியன்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.