வடகிழக்கு பருவமழை துவங்கவிருக்கும் நிலையில் பொதுமக்கள் மழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்கு டி.என் அலர்ட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, "ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலர்ட் (TN- ALERT -Mobile App) என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியை பொதுமக்கள் எளிய முறையில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TN- ALERT -Mobile App மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். இதில் அடுத்தடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்ய கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இலவச தொலைப்பேசி எண்:1077 (0431-2418995) என்ற தொலைப்பேசி எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இந்த TN- ALERT செயலியை ’Google Play Store” மற்றும் ’IOS App Store””-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள TN-ALERT Mobile-செயலியினை பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசுசாரா அமைப்பினர் (NGOs) அனைவரும் பதிவிறக்கம் செய்திட வேண்டும் எனவும், இந்த செயலி நிறுவப்பட்டால் செல்போன் Switch off ஆகி உள்ள நிலையிலும் பேரிடர் காலத்தில் சப்தம் எழுப்பி எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், மேலும் அந்த எச்சரிக்கை செய்தியினை படித்தால் மட்டுமே அதன் எச்சரிக்கை ஒலி அளவு குறையும் வகையில் உள்ளதால் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.