TN Assembly 2023: புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டசபையில் முதன் முறையாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநர் உரையுடன் தொடங்கும். எனவே, அந்த அடிப்படையில் தமிழக ஆளுநர் இன்று உரை நிகழ்த்தியிருக்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க நாளில் உரையாற்றி இருந்தார். ஆனால், அது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியதாவது:
பரந்தூர் விமான நிலையத்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும், சர்வதேச அளவில் உள்ள விமான போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும் என்பதால், இந்த திட்டம் நடைபெறும் என்று தனது உரையில் கூறியிருக்கிறார்.
மேலும், "கடந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்க பணிகள் முன்கூட்டியே முடியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது", என்று பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், "பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு மக்களின் உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டு நிலுவையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த இந்த குறுகிய காலத்தில், செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது. 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு வைத்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு அடைந்துள்ளது. குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது", என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil