தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் 3வது நாளான இன்று அனல் பறந்த விவாதம், புதிய அறிவிப்புகள் என சட்டசபை முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான புதிய திட்டங்கள்:
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.
உயர பறந்த தேசிய கொடி; வியந்த போலீஸ் - சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அம்மாவின் அரசு, தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்
சமூக பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கும், காப்பகங்களில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய இல்லவாசிகளுக்கும், சமூக பாதுகாப்புத் துறையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத காலிப் பணியிடங்களில் பணியமர்த்த தற்போது அரசாணை உள்ளது.
அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் இயங்கும், சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
இதைத் தவிர, சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்
இஸ்லாமியர்களுக்கான அறிவிப்பு
சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி என்றும் அறிவித்தார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் பேசும் போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் என கூறினார்.
ஹைட்ரோகார்பன்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியில் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக கூறினார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காவிரி டெல்டா மண்டலம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சென்னை மெட்ரோ ரயிலிலேயே இனி சைக்கிள் ஓட்டலாம் - ஜாலி ரைடுக்கு நீங்க ரெடியா?..
7 பேர் விடுதலை
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், "7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்; கவர்னரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது" என கூறினார்.
முதல்வர் பழனிசாமி கூறும் போது 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என கூறினார்.
அப்படி ஒரு நிலை வராது
துரைமுருகன் பேசுகையில், "தமிழக அரசின் கடன் நான்கரை லட்சம் கோடி ரூபாயாக கொண்டு வந்திருக்கிறீர்களே; நாளை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது எங்கள் தலைவர் என்ன செய்வார் என கவலைப்படுகிறோம்" என கூறினார்
முதல்வர் பழனிசாமி, 'உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை. அப்படி ஒரு நிலை வராது' என பதில் அளித்தார்.
வேடசந்தூர் உறுப்பினர் பரமசிவம், பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
அதனால் ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள ஏதுவாக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் எதுவும் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள என தனியாக துறை அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டொன்றுக்கு 2 லட்சம் பெண்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு 80 ஆண்களும், கடந்த 2019ம் ஆண்டு 800 ஆண்களும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டு இருக்கின்றனர்.
விருப்பமுள்ள, தகுதி உள்ள ஆண்கள் யார் வந்தாலும், கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என கூறினார். இந்த சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்" என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.