சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
Advertisment
தீர்மானத்தை முன்மொழிந்து ஸ்டாலின் பேசுகையில் “சமீபகாலமாக சாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட இதே பேரவையில் பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு கூட.
ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மத்திய அரசால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சட்டத்தின் படி மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.
புள்ளிவிவரச் சட்டம் 2008ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். இதன்படி சமூக பொருளாதார கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். ஆனால் விதிகளின்படி சாதிவார் கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது.
சட்டப்படி மத்திய அரசால் மேற்கொள்ளக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் நிலைக்க கூடியது. எனவேதான் இந்த பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முதன்முறையாக கொரோனாவை காரணம் காட்டினார்கள். அதன் பின்னும் எடுக்கவில்லை. இது கடமையை புறக்கணிக்கும் செயல்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
எனவே ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“